மன்னார்குடி ஹரித்திரா நதி தெப்பக்குளம்
சகல தோஷங்களையும் போக்கும் காசிக்கு நிகரான மன்னார்குடி ஹரித்ரா நதி தெப்பக்குளம்.
காவிரியின் மகள், உபகாவிரி, மகா காவிரி, கண்ணன் திருவாய் கொப்பளித்த தீர்த்தம், மங்களங்கள் வழங்கும் தீர்த்தம் என பல சிறப்புகளை கொண்ட மன்னார்குடியில் அமைந்துள்ள ஹாரித்ரா நதி தெப்பக்குளத்தின் சிறப்புகளை தெரிந்து கொள்வோம்……
இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆணி தெப்ப திருவிழா மிக பிரசித்தி பெற்ற ஒன்றாகும். 1642 ஆம் ஆண்டு பங்குனி மாதம் ராகவேந்திர சுவாமிகள் மன்னார்குடிக்கு வருகை தந்த போது இந்த ஹாரித்ரா நதி தெப்பக்குளத்தில் புனித நீராடியாதாக கூறப்படுகிறது. நான்கு புறமும் சுட்ட செங்கற்களை கொண்டு நன்கு கட்டமைக்கப்பட்ட கரைகளை உடைய இந்த ஹரித்ரா நதி தெப்பக்குளத்தின் நான்கு புறமும் மொத்தம் 16 படித்துறை வாயில்கள் உள்ளது.குளத்தின் மையத்தில் வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது.
ராஜகோபாலசுவாமி எப்படி காட்சி அளிப்பாரோ அதேபோல ருக்மணி சத்யபாமா சமேதராக கருடாழ்வாருடன் இங்கு வேணுகோபாலனாக காட்சி அளிக்கிறார். முந்தைய நாட்களில் தினமும் வேணுகோபால சுவாமி கோவிலுக்கு தீட்சிதர் ஒருவர் சிறிய தெப்பம் ஒன்றை அமைத்து அதில் சென்று பூஜை செய்து வந்ததாக தெரிகிறது.
ஆனால் தற்போது அவர் செல்லாத நிலையில் தின பூஜை நடப்பது இல்லை. தெப்போற்சவ நாட்களில் மட்டும் பூஜைகள் நடந்து வருகிறது. பவித்தோற்சவம், பிரம்மோற்சவம், ஆடிப்பூர தெப்போற்சவ நாட்களில் இந்த குளத்தில் தீர்த்தவாரி நடை பெறுவது வழக்கம்.நாரத புராணத்தில் இக்குளத்தின் பெருமைகள் பற்றி ஏராளமாக சொல்லப்பட்டிருக்கிறது. நாரதருடைய உபதேசத்தால் கோபிள, கோபிரலய மகரிஷிகளுக்கு கிருஷ்ண அவதாரத காட்சி கிடைத்ததாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. 16 ஆயிரம் கோபியர்கள் கிருஷ்ணருடன் மஞ்சள் தேய்த்து இங்கு ஜலக்கிரீடை விளையாடியதால் குளத்திற்கு ஹரித்ரா நதி என்று பெயர் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது.
ஹரித்திரா என்றால் வடமொழியில் மஞ்சள் என்று அர்த்தம். கோபியர்கள் மஞ்சள் தேய்த்து குளித்ததால் ஹரித்ரா நதி என பெயர் வழங்கலாயிற்று என குறிப்பிடுகின்றனர். ஜலக்கிரீடை முடிந்ததும் இதை நாரதர் புண்ணிய தீர்த்தம் என்று அறிவித்ததால் அன்று முதல் இந்த ஹரித்ரா நதி புண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது. காசியில் தீர்த்தக் கட்டங்கள் உள்ளது போல இந்தக் ஹரித்ராநதி தெப்பக்குளத்திலும் தீர்த்தக் கட்டங்கள் உள்ளது.
( சீராப்தி என்று அழைக்கப்படும் பால் கடல் படித்துறை ) :
ஹரித்ரா நதி தெப்பக்குளத்தின் கிழக்கு பகுதியில் மொத்தம் இரண்டு படித்துறைகள் உள்ளது. குளத்தின் நடுவே வேணுகோபாலசுவாமி எழுந்தருளியுள்ள மைய்ய மண்டபத்திற்கு எதிரே அமைந்துள்ள படித்துறைக்கு சீராப்தி படித்துறை என்று பெயர். இந்த படித்துறைக்கு பால்கடல் படித்துறை என்ற மற்றொரு பெயறும் உண்டு. இந்த படித்துறையில் ஆவணி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் குளித்தால் பாற்கடலில் குளித்து கிருஷ்ணா பகவாணை ஆராதித்த பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.
(மங்கம்மா படித்துறை) :
தெப்பக்குளத்தின் கிழக்கு பகுதியில் இரண்டாவதாக அமைந்துள்ள இந்த படித்துறைக்கு மங்கம்மாள் படித்துறை என்று பெயர். ராணி மங்கம்மாவிற்கு பெண்களுக்குறிய சில பிணிகள் இருந்ததால் அவர் ராஜகோபாலனை பிராத்தனை செய்தார். ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் உள்ள இந்த படித்துறையில் தான் கோபாலனை பிராத்தித்து ராணி மங்கம்மா நிராடினார். இதனால் ராணி மங்கமாவின் உடல் பிணிகள் நீங்கியது. எனவே “ருது” அடையாத பெண் பிள்ளைகள் இந்த படித்துறையில் குளித்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் பெண்கள் பூப்படைந்து விடுவார்கள் என்பது நம்பிக்கை. மன்னர்கள் காலத்தில் ராஜ குடும்பத்து பெண்கள் இப் படிதுறையில் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
(தீர்த்தவாரி படித்துறை):
குளத்தின் தெற்கு பக்கத்தில் தென்கரை முழுவதும் ஒரே படித்துறையாக காட்சியளிக்கும் இது தீர்த்தவாரி படித்துறை என அழைக்கப்படுகிறது. ராஜகோபால சுவாமிக்கு தீர்த்தவாரி வரும்பொழுது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வதால் அவர்கள் நீராடுவதற்கு வசதியாக இந்த படித்துறை நீளமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜகோபாலசுவாமியை குலதெய்வமாக கொண்டவர்களும் ராஜகோபால சுவாமிக்கு காணிக்கையாக முடி இறக்குபவர்களும் இந்த படித்துறையில் குளிப்பது வழக்கம்.
திதி தர்பணம் போன்ற சடங்குகளும் தற்போது இங்கு செய்யப்படுகிறது. தென் கரையில் ஸ்ரீனிவாசன் சன்னதி உள்ளது. சுவாமி திருப்பதி பெருமாளாக இங்கு எழுந்தருளி இருக்கிறார். தென்கரையின் மூலையில் ஒரு விநாயகர் ஆலயமும் அதன் பின்புரம் தெற்கு நோக்கிய திசையில் உள்ள வீரஆஞ்சநேயர் ஆலயமும் பிற்காலத்தில் கட்டப்பட்டவைகளாகும்.
(மாக படித்துறை என்றழைக்கப்படும் ஏகாதசி படித்துறை):
தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் உள்ளது இந்த ஏகாதசி படித்துறை.
மாசி மாதத்தில் மகாமகத்திற்கு செல்ல முடியாதவர்கள் இந்த படித்துறையில் குளித்தால் மகாமக குளத்தில் குளித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மாசி மாதம் முழுவதும் இந்த படித்துறையில் குளித்தால் மகாமகம் அன்று குளித்த பலன் கிடைக்கும்.மாக படித்துறைக்கு ஏகாதசி படித்துறை என்ற மற்றெறு பெயறும் உள்ளது. ஒவ்ஒரு மாதமும் வரும் ஏகாதசி நாட்களில் விரதமிருந்து இந்த படித்துறையில் குளிப்பது சிறப்பு. அப்படி விரதமிருக்க முடியாதவர்கள் நாள்தோறும் இந்த படித்துறையில் குளித்து வந்தால் ஏகாதசி விரதம் இருந்த பலனை அடையளாம் என நாரத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏகாதசி படித்துறையின் இடதுபுரம் ஆஞ்சநேயர் ஆலயம் ஒன்றும் அமைந்துள்ளது.
(சன்னியாசிகள்,படித்துறை) :
தெப்பக்குளத்தின் மேற்கு கரையில் ஏகாதசி படித்துறைக்கு அடுத்ததாக அமைந்துள்ள படித்துறைக்கு சன்னியாசிகள்,படித்துறை என்று பெயர்.
சன்னியாசிகள், ஆச்சாரியர்கள், அனுஷ்டானம் செய்பவர்களுக்கான படித்துறை ஆகும். மேற்கு ஆசிரம படித்துறை, துறவிகள் படித்துறை, எதிகள் படித்துறை என்றும் ஸ்னான கட்ட படித்துறை என்றும் அழைக்கப்படுகிறது.
(அரிச்சந்திரா காட் என்கிற அரிச்சந்திர படித்துறை :
ஹரித்ராநதி தெப்பக்குளத்தின் வட மேற்கு மூலையில் அமைந்துள்ள படித்துறைக்கு அரிச்சந்திரா காட் படித்துறை என்று பெயர். இறுதிச் சடங்கு முடித்து விட்டு வருபவர்கள் இந்த படித்துறையில் குளித்து விட்டு சடங்குகளை செய்வதற்காக உள்ளது. இந்த படித்துறையில் இறுதி சடங்குகளை செய்துவிட்டு குளிப்பதால் காசியில் குளித்த புண்ணியம் கிடைக்கும்.
(சிவராத்திரி படித்துறை):
குளத்தின் வடக்கு கரையில் ராமர் சன்னதி உள்ளது. சன்னதிக்கு அருகே உள்ள படித்துறை சிவராத்திரி படித்துறை என அழைக்கப்படுகிறது. இது சிவராத்திரியன்று வழிபாடு செய்து குளிக்கும் படித்துறையாகும்.
சிவராத்திரியன்று குளித்தால் அனைத்து சிவாலங்களையும், 12 ஜோதிட லிங்கங்களையும், தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ராஜகோபால சுவாமி கோவில் பிரம்மோற்சவ திருவிழா நிறைவுற்று பதினாறாம் நாள் தேர்த் திருவிழா முடிந்து முதல் விடையாற்றி நாளன்று ராமர் சன்னதி படித்துறையில் ராஜகோபாலசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு ஒரு நாள் முழுவதும் இங்கு தரிசனம் தருவது வழக்கம். இந்த சிவராத்திரி படித்துறை, ராமர் படித்துறை என்றும் அழைக்கப்படுகிறது.
நம்பிக்கை துரோக, பிரம்மஹத்தி தோஷம் அகல, காலை ,மதியம், மாலை என மூன்று வேளையும் ஜெபம் செய்து இந்த இடத்தில் ஸ்நானம் செய்தால் இந்த தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
சிவராத்திரி படித்துறை ராமர் கோவில் அருகே ஆஞ்சநேயர் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருக்கிறார். இது காசியில் சிவன் இருக்கும் நிலையில் இந்த இடத்தில் ஆஞ்சநேயர் நீருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது.
(ஜப மண்டப படித்துறை) :
தெப்பக்குளத்தின் ஈசானிய மூளையில் வடகிழக்கு பகுதியில் உள்ள படித்துறைக்கு ஜப மண்டப படித்துறை என்று பெயர். இந்த படித்துறையில் விநாயகர் ஆலயம் ஒன்றும் உள்ளது. ஆத்ம சக்தியை பெருக்கி இறையருளை பெற ரிஷிகள்,முனிவர்கள் போன்றோர் தியானம் செய்த படித்துறை இது.கிரகண காலங்களில் இங்கு நீராடிவிட்டு இறைவனை பிரார்த்தித்தால் முக்தி கிடைக்கும்.
("ஆ கா மா வை வழிபாடு):
கோயிலையும் குளத்தையும் வலம் வந்து தரிசனம் செய்து வழிபடும் "ஆ கா மா வை" வழிபாட்டு முறை முந்தைய காலத்தில் பின்பற்றப்பட்டது.
அதாவது ஆவணி,
கார்த்திகை,
மாசி,
வைகாசி
ஆகிய மாத பிறப்பில் சூரிய உதய காலத்தில் ராஜகோபாலசுவாமி கோவில் , ஹரித்ரா நதி தெப்பக்குளம் ஆகிய இரண்டையும் ராஜகோபாலசுவாமி கோவில் எதிரே உள்ள கருட ஸ்தம்பத்தில் ஆரம்பித்து வலமாக சுற்றிவந்து அதே இடத்தில் முடித்து வழிபடுவது ஆகும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் கிரிவலம் செய்த பலன் கிடைக்கும்.
ஆ கா மா வை வழிபாடு செய்தால் கல்வி,தொழில், ஞானம், திருமண பாக்கியம் , புத்திர பாக்கியம் ,ஜாதக ரீதியில் கிடைக்காமல் உள்ள பாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆவணி, கார்த்திகை, மாசி, வைகாசி என்ற நான்கு மாதங்களின் முதல் எழுத்தை வைத்து இந்த வழிபாட்டு முறைக்கு ஆ கா மா வை என்று பெயர் வந்துள்ளது.
இத்தகைய சிறப்புகளை கொண்ட மன்னார்குடி ஹரித்ரா நதி தெப்பக்குளத்தை பாதுகாத்து இனிவரும் சந்ததியருக்கு இதன் பெருமைகளையும், நீர் நிலைகளை பாதுகாப்பதன் அவசியத்தையும் எடுத்துக்கூறி வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று மக்களும் பிற உயிரிகளும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல ராஜகோபாலனை பிரார்த்திபோம்………
Comments
Post a Comment